தமிழக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து இன்று தமிழகம் முழுவதும் 52 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இதில் முதல் குற்றவாளியாக முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள எஸ். பி. வேலுமணி, அவரது பினாமிகள் மற்றும் சகோதரர்கள் உறவினர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் முழு விவரம்: முன்னாள் உள்ளாட்சித்தறை அமைச்சர்
எஸ் பி வேலுமணி மற்றும் 17 பேர் மீது நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கங்காதர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார். 19 பக்க முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார் .எஸ். பி. வேலுமணி தனது பதவி காலத்தில் கட்டுமான பணிகள் மற்றும் கட்டுமான பொருட்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் வாங்குவதில் சென்னை மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சியில் பெருமளவில் ஊழல் செய்ததாக கூறப்பட்டுள்ளது .கோவை மற்றும் சென்னை மாநகராட்சியில் எஸ் .பி. வேலுமணி நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நடத்தப்பட்டுவரும் பி. செந்தில் அண்ட் கோ, கேசிபி இன்ஜினியர்ஸ் உட்பட 17 நிறுவனங்கள்,நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தின் கன்வீனர் ஜெயராமன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். எஸ் பி வேலுமணி மற்றும் அவரது பினாமிகள் உறவினர்கள் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக அதில் குறிப்பிட்டு இருந்தனர். இதனடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எஸ் பி வேலுமணி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இதுவரை 4 முறை பேரூர் மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக பஞ்சாயத்து துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். மேலும் சென்னை மெட்ரோபாலிட்டன் வாட்டர் சப்ளை போர்டு சேர்மன் ஆகவும் எஸ். பி .வேலுமணி பதவி வகித்து வந்தார். கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் கார்ப்பரேஷனில பதிவு செய்யப்பட்ட கான்ட்ராக்டர் ஆக எஸ் பி வேலுமணி இருந்து வந்தார். அந்த சமயத்தில் வேலுமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் செந்தில் அண்ட் கோ என்ற நிறுவனம் 1999 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதை அடுத்து 2001ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்தில் செந்தில் அன்கோ நிறுவனத்திலிருந்து எஸ். பி வேலுமணி ராஜினாமா செய்து வெளியேறினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு தேர்தல் முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த எஸ். பி. வேலுமணி கடந்த 2014 ஆம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். உள்ளாட்சி துறை அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி வந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எஸ். பி வேலுமணி மற்றும் அவரது பினாமிகள் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனம் மூலம் சென்னை மாநகராட்சியில் சுமார் 464 கோடி ரூபாய்க்கும் கோவை மாநகராட்சியில் 346 கோடி ரூபாய்க்கும் காண்ட்ராக்டர்கள எடுக்கப்பட்டுள்ளது. தனது பதவியை சாதகமாக பயன்படுத்தி அவர்களை தனது பினாமி களுக்கு எஸ். பி. வேலுமணி எடுத்துக் கொடுத்துள்ளார். அதிக மதிப்புள்ள டெண்டர்களை முறையான அறிவிப்புகள் எதையும் வெளியிடா மல் ,அதேபோல தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு டெண்டர்களை வழங்காமல் முறைகேடாக எஸ் பி வேலுமணி க்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல டெண்டர்களில் குறிப்பிட்ட தொகையைவிட பணி முடிவதற்கு முன்பு கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டு அதற்குரிய உத்தரவும் உள்ளாட்சித்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
டெண்டர் விடுவதில் இருந்து டெண்டரை எடுப்பது முதல் பின்னர் கூடுதல் தொகையை அரசிடமிருந்து பெறுவது என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ். பி. வேலுமணி சகோதரர் எஸ். பி. அன்பரசன் மற்றும் ராஜன் ரத்தினசாமி ஆகியோர் கோவை மாநகராட்சியில் பதிவுசெய்த காண்ட்ராக்டர் களாக உள்ளனர். இதன்மூலம் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 47 டெண்டர்களை எடுத்துள்ளனர்.
மேலும் அவ்வாறு முறைகேடாக எடுத்தவர்களுக்கு வேண்டுமென்றே போலியான நிறுவனங்கள் மூலம் கூடுதல் தொகைக்கு டெண்டர் கேட்டு ஒரே கம்ப்யூட்டரிலிருந்து விண்ணப்பங்களை அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது. மற்ற நிறுவனங்களை விட குறைவான தொகையில் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவேண்டும் என்பதற்காக அவ்வாறு போலியாக தொண்டர்களை போலியான நிறுவனங்கள் மூலம் பதிவிட்டு பின்னர் தங்களது நிறுவனத்திற்கு சாதகமாக எடுத்துள்ளனர். இதேபோல கே. சந்திரபிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கோவை மாநகராட்சியில் 5 டெண்டர்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் முறைகேடான முறையில் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 மற்றும் 15 ஆம் ஆண்டுகளில் கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ராபர்ட்ராஜா ஆகியோர் மாநகராட்சி வெளியிட்ட 14 டெண்டர் களையும் அப்படியே வேறு யாரும் எடுக்காமல் தாங்களே எடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி சார்பில் 2015 ஜனவரி முதல் அக்டோபர் வரை வெளியிடப்பட்ட 131 டெண்டர்களில் 130 டெண்டர்களை கேசிபி இன்ஜினியர்ஸ்,
வர்தான் இண்பிராஸ்டரெக்டுர்ஸ்,
கான்ஸ்டிரானிக்ஸ் இந்தியா, செந்தில் அண்ட் கோ மற்றும் ராபர்ட் ராஜ் ஆகியோர் எடுத்துள்ளனர். இவை அனைத்தும் சில உதாரணங்கள் மட்டுமே என்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி தனது பதவியை பயன்படுத்தி அதிகாரிகள் துணையோடு அனைத்து டெண்டர்களையும் முறைகேடாக எடுத்துள்ளார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் எஸ் பி வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு சூலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சூலூர் பகுதியில் 2 ஏக்கர் 70 சென்ட் இடமும் 2 ஏக்கர் 30 சென்ட் இடமும் வாங்கப்பட்டு கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நடத்தப்பட்டு வருகிறது. இதிலிருந்து எஸ் பி வேலுமணி மற்றும் கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு நேரடியாக தெரிய வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
.வடவள்ளி இன்ஜினியர் ஆர். சந்திரசேகர் அமைச்சர் எஸ் பி வேலுமணி மிகவும் நெருக்கமானவர் ஆவார் .இவர் அமைச்சர் எஸ் பி வேலுமணி உடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய தொடர்பில் உள்ளவர். மேலும் இவர் அதிமுகவின் கோவை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான சென்னை ராயபுரத்தில் உள்ள ரோஜா இல்லத்தில் இன்ஜினியர் ஆர் சந்திரசேகர் மற்றும் அவரது தந்தை கு.ராஜன் ஆகியோர் இருந்து அனைத்து டெண்டர்களிலும் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களே எடுக்கும்படி செய்துள்ளனர். இதன்மூலம் ஏராளமான ஆதாயம் பெற்றுள்ளனர.
மேலும் கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் கே. சந்திர பிரகாஷ் மற்றும் இன்ஜினியர் ஆர். சந்திரசேகர் ஆகியோர் நிறுவனர்களாகவும் அதிக பங்குகளை கொண்டவர்களாகவும் செயல்பட்டு வருகின்ரணர்.
கே .சந்திர பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் வர்த்தான், ஓசூர் பில்டர்ஸ், கேசிபி பிராப்பர்டி, ஆலயம் பவுண்டேஷன், ஆகியவற்றில் பங்குதாரர்களாக உள்ளனர். அதேபோல இன்ஜினியர் சந்திரசேகர் ஏ .ஆர். எஸ். பி . இன்ப்ரா லிமிடெட் நிறுவனத்திலும,
டூ லிப் மீடியா மற்றும் சிஆர் கன்சக்சன் ஆகிய நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். மேலும் சந்திரபிரகாஷ் மற்றும் ஆர். சந்திரசேகர் ஆகிய இருவரும் கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் கான்ஸ்டரோமால் குட்ஸ், இன்விக்டா மெடி டெக், ரத்னா லக்ஷ்மி ஹோட்டல்ஸ், வைடூரிய ஹோட்டல்ஸ் ,ஆலம் கோல்ட், மற்று ம் கான்ஸ்டிரானிக்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களில் பங்குதாரர்களாக உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எஸ். பி .வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சொந்தமான பி. செந்தில் அண்ட் கோ நிறுவனத்திற்கும் கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனம் மற்றும் பினாமிகள் நிறுவனத்துடன் முறைகேடான முறையில் தொடர்புகொண்டு டெண்டர்களில் அமைச்சர் எஸ் .பி .வேலுமணி முறைகேடு செய்து ஆதாயம் பெற்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைகேடான நிறுவனங்கள் 2012 ஆம் ஆண்டு தங்களது நிறுவனம் வரவு செலவு அறிக்கையாக சில கோடிகளை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 2018 ஆம் ஆண்டு இவர்களை நிறுவனத்தின் வளர்ச்சி பல ஆயிரம் மடங்காக வளர்ந்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கோவை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகளை செய்து பலன் அடைந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 120 பி,420, 409, 13/2, 13/1சி மற்றும் 13/1டி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments