‘ரெம்டெசிவிர்’ மருந்து கேட்டு டாக்டர்கள் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது - பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்.

‘ரெம்டெசிவிர்’ மருந்து கேட்டு டாக்டர்கள் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது - பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்.

in News / National

தமிழகம் முழுவதும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், ‘ரெம்டெசிவிர்’ மருந்து கேட்டு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலக சுகாதார நிறுவனம், தெற்கு ரெயில்வே, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், யுனிசெப் இணைந்து ரெயில் பயணிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் தலைமை தாங்கி கொரோனா விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்கள் அடங்கிய பதாகைகள், வீடியோக்களை வெளியிட்டனர்.

இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் செல்வவிநாயகம் கூறியதாவது:-

‘ரெம்டெசிவிர்’ உயிர்காக்கும் மருந்து அல்ல. இதனை தனியார் டாக்டர்கள் தேவையில்லாமல் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து கட்டாயம் அல்ல. அரசு மருத்துவமனைகளில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனை டாக்டர்கள், பொதுமக்களிடம் ‘ரெம்டெசிவிர்’ மருந்து கேட்டு அலைக்கழிக்க கூடாது.

மேலும் பொதுமக்கள் அவசியமில்லாமல் இந்த மருந்துக்காக காத்திருக்க தேவையில்லை. தற்பொழுது சென்னையில் மட்டும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் வினியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்த மத்திய அரசிடம் 1.50 கோடி தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளன. அவை கிடைத்தவுடன் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதித்ததன் காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில் முழுமையாக தொற்றின் எண்ணிக்கை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top