மருத்துவமனை நிர்வாகத்தினர், நாய் தவறுதலாக மருத்துவமனைக்குள் நுழைந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் பணம் தருவதாகவும் ரவியிடம் கூறியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஃபாருக்காபாத் எனும் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்து சில மணிநேரங்களே ஆன குழந்தையை நாய் ஒன்று கடித்துக்கொன்றதாக வெளியான தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தன்னுடைய மனைவி காஞ்சனாவை ஃபாருக்காபாத் பகுதியிலுள்ள ஆகாஷ் கங்கா எனும் தனியார் மருத்துவமனையில் பிரவசத்துக்காக நேற்று சேர்த்துள்ளார். மருத்துவமனை அலுவலர்கள் ரவிக்குமாரிடம், `உங்கள் மனைவிக்கு சுகப்பிரவேசம் நடக்கப்போகிறது. அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை' என்று கூறியுள்ளனர். சிறிது நேரப் பரிசோதனைக்குப் பின்னர், மீண்டும் மருத்துவர்கள் வந்து அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளனர்.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், ரவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் மனைவியை சாதாரண வார்டுக்கு மாற்றுவதாகவும் அதுவரை காத்திருக்குமாறும் அலுவலர்கள் கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்து ஓடிவந்த மருத்துவமனை அலுவலர் ஒருவர், `ஆபரேஷன் தியேட்டருக்குள் நாய் புகுந்துவிட்டது’ என்று கத்தியுள்ளார்.
இதனால், பதற்றமடைந்த ரவிக்குமார், ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று பார்த்துள்ளார். தன்னுடைய குழந்தை ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். குழந்தையின் மார்பு மற்றும் கண் பகுதியில் நாய் கடித்ததற்கான காயங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய குழந்தையின் உதவிக்காக கத்திக்கொண்டிருக்கும்போது, அந்த நாய் மீண்டும் ஆபரேஷன் தியேட்டருக்குள் வர முயற்சி செய்ததாகவும் ரவிக்குமார் கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.
மருத்துவமனை நிர்வாகம் இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்திருக்கிறது. இதற்காக ரவிக்குமாருக்கு பணம் கொடுப்பதாகக் கூறி அவரிடம் பேரம் பேசியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், குழந்தை இறந்து பிறந்ததாகவும் மருத்துவமனைக்குள் நாய் தவறுதலாக நுழைந்துவிட்டதாகவும் கூறி மருத்துவமனை நிர்வாகம் ரவிக்குமாரை சமாதானம் செய்ய முயன்றதாகவும் தெரிகிறது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து பேசிய மாவட்ட நீதிபதி மாவேந்திர சிங்,``இந்தச் சம்பவம் நடைபெற்றதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்” எனக் கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக அரசின் துணை மருத்துவ தலைமை அதிகாரி ராஜீவ் ஷாக்யா விசாரணை நடத்தியுள்ளார். இதில், ஆகாஷ் கங்கா எனும் தனியார் மருத்துவமனை உரிய ஆவணம் இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர்.
0 Comments