கொடுமுடி:
கொடுமுடி பகுதியில் காயவைக்கப்பட்ட மஞ்சள் கனமழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தார்கள்.
மஞ்சள் சாகுபடி:
கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சாலைப்புதூர், வெங்கம்பூர், ஊஞ்சலூர் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்திருந்தார்கள்.
கடந்த 2 மாதங்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடந்தன. பொதுவாக மஞ்சளை வெட்டி பின்னர் அதை வேகவைத்து, காயவைத்து சுத்தப்படுத்தவேண்டும். அதன்பின்னரே விற்பனைக்கு அனுப்புவார்கள். வேகவைத்த மஞ்சளை வெயிலில் காயவைக்கும்போது, மழையில் நனைந்துவிட்டால், அதன் தரம் குறைந்துவிடும். விவசாயிகளுக்கு நஷ்டமே மிஞ்சும்.
மழையில் நனைந்தது:
கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியில் விவசாயிகள் பலர் மஞ்சளை வேகவைத்து தங்களுடைய தோட்டத்திலேயே வெயிலில் காயவைத்திருந்தார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கொடுமுடி பகுதியில் கனமழை பெய்தது.
இதனால் விவசாயிகள் காயவைத்திருந்த மஞ்சள் மழை தண்ணீரில் நனைந்தன. மேலும் காயவைக்கப்பட்டு இருந்த களங்களிலும் தண்ணீர் சூழ்ந்திருந்தது.
இதனால் மஞ்சள் மீண்டும் காயவைக்கப்படவேண்டும். மேலும் தரமும் குறைந்துவிடும். ஏற்கனவே மஞ்சளுக்கு கட்டுப்படியாகாத விலை கிடைக்கிறது. இதில் இயற்கையும் எங்களை வஞ்சித்தால் நாங்கள் என்ன செய்வது என்று விவசாயிகள் கவலையடைந்தார்கள்.
0 Comments