உன்னாவ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, குல்தீப் செங்கார் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவ்வழக்கு உபி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் குல்தீப் செங்காரை குற்றவாளி என கடந்த 16ஆம் தேதி தீர்ப்பளித்தது டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம். தண்டனை விவரங்கள் டிசம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.
அதன்படி, நேற்று (டிசம்பர் 20) செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அபராதமாக 25 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்றும் அது பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்கப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்பான வீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தண்டனை விவரம் 45 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் எனவும் கூறியது. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த சம்பவத்தில் தற்போது ஒரு வழக்கில் குல்தீப் சிங் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். இதை தவிர 4 வழக்குகள் விசாரணையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments