கால்நடை பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓட்டுநர், நடத்துநர் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் உதவுவது போல் நடித்து வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று (நவம்பர் 27) மாலை பணி நிமித்தமாகத் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், தொண்டுபள்ளி சுங்கச்சாவடியில் தனது இரு சக்கர வாகனத்தை பார்க் செய்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் பணி முடிந்து வந்து பார்த்த போது அவரது இரு சக்கர வாகனம் பஞ்சர் ஆகியிருந்தது.
அப்போது எப்படி வீட்டுக்குச் செல்வது என யோசித்துக் கொண்டிருந்த அவரிடம் இருவர் சென்று பேசுவது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அவர்கள் பஞ்சர் ஒட்டித் தருவது போல் நடித்து ப்ரியங்காவிடம் பேசியுள்ளனர். அப்போது பதற்றமடைந்த திவ்யா தனது சகோதரிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது.
இதனிடையே அவரிடம் பேச்சுக் கொடுத்தவர்கள் உட்பட மொத்தம் நான்கு பேர் திவ்யாவைக் கடத்தி சென்று வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். தன்னுடைய மகளைக் காணவில்லை என்று அவர்களது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் தேடி வந்தபோது, அங்கிருந்த ஒரு பாலத்தின் கீழே எரிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நான்கு பேரைக் கைது செய்துள்ளதாக சம்ஷாபாத் டிசிபி பிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். முக்கிய குற்றவாளியாக நாராயன்பேட் சேர்ந்த முஹம்மது பாஸா பிடிபட்டார். அவருடன் ஜோலு நவீன், சென்னகேசவலு. ஜோலு சிவா ஆகியோர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரியங்காவை மறைவான இடத்துக்குக் கடத்தி சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் கொலை செய்து இதில் இருந்து தப்பிப்பதற்காகப் பாலத்தின் கீழே அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகத் தெரிவித்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் எது? எப்போது நாட்டில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு இருக்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஹைதராபாத்தை இதுவரை மிக மிகப் பாதுகாப்பான நகரம் என எண்ணியிருந்தேன். அங்குதான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக அமையும்” என்று கேள்வி எழுப்பியதுடன் ப்ரியங்காவின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்
0 Comments