உத்தரப்பிரதேசத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு!

in News / National

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதுப் பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நெருக்கமாக பழகிய இளைஞர், திருமண பேச்சு எடுத்த போதெல்லாம் தட்டிக்கழித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அவரும், மற்றொரு இளைஞரும் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதை படம் பிடித்துள்ளனர்.

இதையடுத்து, அந்தப்பெண் புகார் அளித்ததின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் காவலர்கள் பிடியிலிருந்து தப்பியோடிவிட்டார். மற்றொருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்த நபர் நவம்பர் 30-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை அந்தப் பெண் ரேபரேலி நீதிமன்றத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டு சென்றுள்ளனர்.

உடம்பில் பற்றி எரிந்த தீயுடன் அந்த பெண் உதவிக்காக அலறியபடியே சுமார் 1 கி.மீ தூரம் வரை ஓடிவந்துள்ளார். பற்றி எரிந்த தீயுடன் கையில் இருந்த மொபைல் போனில் இருந்து 112 என்ற அவசர எண்ணுக்கு அழைத்து உதவி கேட்டுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள்ளாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டனர். 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது நீதிபதி முன்னிலையில் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தன்னை 5 பேர் கடத்திச் சென்று தீயிட்டுக் கொளுத்தியதாகவும், அதில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தவர் என்றும் கூறியுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு விமானம் மூலம் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இதையடுத்து பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றச்செயலில் ஈடுபட்டன 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், 90 சதவீதம் தீக்காயத்துடன் டெல்லி சப்ஃதர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், நேற்றிரவு 11.40 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், நேற்று இரவு 8 மணி முதல் பாதிக்கப்பட்ட பெண் தன் சுய நினைவை இழந்தார். இரவு 11:10 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை காப்பாற்ற நிறைய முயற்சிகள் மேற்கொண்டோம், ஆனால் அவரை காப்பாற்றமுடியவில்லை என கூறியுள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் சகோதரி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தன்னுடைய தாய் ஊர் பஞ்சாயத்துத் தலைவர் என்பதால் உயிரிழந்த பெண்ணின் குடும்பம் மிரட்டப்பட வாய்ப்புள்ளது. இதில் அரசியல் தலையீடு இல்லாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என அந்த இளம் பெண் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top