பெண் டாக்டர் குற்ற சம்பவம் நடந்த அதே இடத்தில் வைத்தே குற்றவாளிகள் என்கவுண்டர்!

பெண் டாக்டர் குற்ற சம்பவம் நடந்த அதே இடத்தில் வைத்தே குற்றவாளிகள் என்கவுண்டர்!

in News / National

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் அவர் மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர்,அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டுமென மக்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுத்தனர்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணியில் நடத்தினர்.

இந்த கொடூர சம்பவத்தில் சிவா,சென்ன கேசவலு, முகமது ஆரிப், நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கை விசாரிக்க தெலுங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்திருந்தது.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை குற்றம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்த போலீசார் நான்கு பேரையும் அழைத்துச் சென்றனர்.

தேசிய நெடுஞ்சாலை 44 ல் காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது காவலர்களை தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்த என்கவுண்ட்டரின் போது மூன்று காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டு கொல்லப்பட்ட பின்னர் நான்கு பேரின் சடலங்களும் ஷத்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற, நால்வரையும், தெலங்கானா போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றிருப்பதை, கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்கள் வரவேற்றுள்ளனர். இன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவிகள், போலீசாரை பார்த்து உற்சாக முழக்கங்களை எழுப்பி, பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுண்ட்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிகையும் எடுக்க கூடாது என்று நிர்பயாவின் தாய் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட கால்நடை பெண் மருத்துவரின் தந்தை, "கைதான 4 பேரும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருப்பது பற்றி கருத்துத் தெரிவித்திருக்கிறார். தமது மகள் இறந்த 10 நாட்களில், குற்றவாளிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருப்பதற்காக தெலுங்கானா அரசுக்கும், காவல்துறைக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமது மகளின் ஆன்மா, தற்போது சாந்தியடையும்" என்று கால்நடை பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்திருக்கிறார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top