கடற்படையின் முதல் பெண் விமானி சிவாங்கி!

கடற்படையின் முதல் பெண் விமானி சிவாங்கி!

in News / National

கடற்படையின் முதல் பெண் விமானியாக உதவி லெப்டினன்ட் சிவாங்கி நேற்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்றைய பெண்கள், பல தடைகளையும் உடைத்து ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். இந்தியாவில் கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படை என முப்படைகளில் ஆண்கள் மட்டுமே அதிகளவு பணியாற்றி வந்தனர். கடந்த 2016ஆம் ஆண்டு முப்படைகளில் அதிகளவில் பெண்களையும் ஈடுபடுத்த பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வந்தது. விமானப்படை மற்றும் ராணுவத்தில் பெண்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 2) இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக பிகாரைச் சேர்ந்த சப் லெப்டினன்ட் சிவாங்கி, கொச்சி கடற்படை தளத்தில் பொறுப்பேற்றார். அப்போது துணை அட்மிரல் ஏ.கே.சாவ்லா விமானியாகத் தகுதிபெறும் ‘விங்ஸ்’ பதக்கத்தை சிவாங்கிக்கு அணிவித்துப் பொறுப்பேற்க வைத்தார்.

இந்திய வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக கடற்படையில் மருத்துவ சேவைகளுக்காக மட்டுமே பெண்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் பெண் விமானியாகப் பொறுப்பேற்றுள்ள சிவாங்கிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விமானியாகப் பொறுப்பேற்றுள்ள இவர் , கடற்படையில் போக்குவரத்து மற்றும் கடல்சார் உளவுத் துறைக்குப் பயன்படுத்தப்படும் டோர்னியர் விமானத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்து கூறிய சிவாங்கி, இந்த ஒரு நாளுக்காகக் தான் காத்திருந்ததாகவும், இது மிகப்பெரிய பொறுப்பு. இதுகுறித்து அனைவருக்கும் தெரியும் என்றும் இதில் சிறப்பாகப் பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.

“எனக்கு 10 வயதாக இருக்கும்போது எனது தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு மக்களைச் சந்திக்க ஓர் அமைச்சர் வந்திருந்தார். அவரை காண எனது தாத்தாவுடன் சென்றிருந்தேன். அங்கு ஒருவர் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நானும் ஒரு நாள் இதுபோன்று பறப்பேன் என்று முடிவு செய்தேன்” என சிவாங்கி தனது இந்த வெற்றிக்கு வித்திட்ட நிகழ்வை நினைவுகூர்ந்துள்ளார். மேலும், தனது வெற்றிக்குக் காரணமாக இருந்த தாய் தந்தைக்கும், பயிற்சி அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விமானிக்கான பயிற்சி எளிதானதல்ல என்று தெரிவித்துள்ள அவர், பயிற்றுநர்கள் தனக்கு பெரிய ஆதரவு கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிகார் மாநிலம், முசாபர்பூர் நகரைச் சேர்ந்த இவர், அங்குள்ள டிஏவி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். சிக்கிம் மணிபால் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மெக்கானிகல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர், ஜெய்ப்பூரில் உள்ள மாலவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் சிவாங்கி சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்பிறகு 2016இல் இந்திய விமானப்படையில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். வரும் 4ஆம் தேதி கடற்படை தின விழா நடைபெறவுள்ள நிலையில் கடற்படையின் முதல் பெண் விமானியாகப் பொறுப்பேற்றுள்ளார் சிவாங்கி.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top