நவீனமயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு மொபைல் கேம் வந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டு, அதற்கு அடிமை ஆக்கிவிடுகிறது . தற்போது பப்ஜி என்ற கேம் அனைவரையும் கட்டிப்போட்டுள்ளது. இந்த விளையாட்டுக்கு அடிமையாகி மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்களும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்து கொண்டு தான் வருகின்றன. இந்நிலையில் பப்ஜி விளையாட்டை ஆர்வமாக விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சவுராப் யாதவ்(20) நண்பருடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். சவுராபின் நண்பர் சந்தோஷ் சர்மா நகை தொழில் செய்பவர் என்பதால் நகைகளை சுத்தம் செய்யும் கெமிக்கலை தன் பையில் வைத்திருந்துள்ளார். ரயில் பயணத்தின்போது தன்னுடைய செல்போனில் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்த சவுராப்புக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. அப்போது விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதிலாக பையில் இருந்த கெமிக்கலை எடுத்து குடித்துள்ளார்.
உடனடியாக சவுராப் மயக்கமடைந்ததால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் அவரை காப்பாற்ற போராடியுள்ளார். அடுத்த ரயில் நிலையம் வந்ததும் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல முற்பட்டனர். எனினும் அடுத்த ரயில் நிலையம் வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் பிரிந்துவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தும் காவல்துறையினர், சவுராப்பின் உடற்கூராய்வு விவரம் வந்தவுடனே முழுமையான காரணங்கள் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
0 Comments