கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான ராகி. எர்ணாகுளத்தில் உள்ள தனியார் கேபிள் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 21-ம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற ராகியிடமிருந்து அதன் பிறகு, எந்தத் தகவலும் வரவில்லை. அவரது ஆபீஸிலும் ராகி அங்கு வரவில்லை எனக் கூறிவிட்டனர். இதனால், பதறி போன பெற்றோர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் விசாரணையில் இறங்கினர். பல நாள்களாக விசாரணை தொடர்ந்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான், ஒரு மாதம் கடந்த பிறகு அவரது வழக்கில் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டது.
காணாமல்போன அன்று ராகியின் செல் டவர் காண்பித்த இடம் அம்பூரி. பூவாரில் இருந்து சில மைல் தூரமே உள்ள அம்பூரிக்கு ஏன் ராகி வந்தார் என்ற விசாரணையில் இறங்கியபோதுதான் ராகியின் காதல் விஷயம் தெரியவந்தது. ராகிக்கு அவரது சொந்த ஊரான பூவாருக்கு அருகே உள்ள அம்பூரி கிராமத்தைச் சேர்ந்த `மிலிட்டரி மேன்' அகில் என்பவருடன் காதல் இருந்தது தெரியவந்தது . இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படித் தெரியுமா? எர்ணாகுளத்தில் வேலை பார்த்துவந்த ராகியும் ராணுவத்தில் இருந்த அகிலும் மிஸ்டுகால் மூலம் நட்பாகி உள்ளனர். இந்த நட்பு பின்னர் காதலாக மாற , இருவரும் 6 வருடங்களாகக் காதலித்துள்ளனர். இந்தத் தகவல் போலீஸுக்குத் தெரியவர அகிலைத் தேடி அவரது வீட்டுக்கு போலீஸார் சென்றுள்ளனர். ஆனால் அவரது வீட்டில் அகிலும் அவரின் தம்பியும் டெல்லிக்குச் சென்றுவிட்டதாகக் கூற அங்கும் சென்று விசாரித்துள்ளனர்.
ஆனால், டெல்லியிலும் அகில் இல்லை. இதன்பிறகுதான் போலீஸுக்கு சந்தேகம் வலுத்தது. ``ராகி காணாமல் போனபோதுவரை ஊரில் இருந்த அகில் அதன் பிறகு, எங்கு போனார். அவனுடன் தம்பியும் ஏன் செல்ல வேண்டும்'' எனப் பல்வேறு சந்தேகங்கள் எழவே, ஊரில் அகிலின் நெருங்கிய நண்பரான ஆதர்ஷை விசாரித்தது போலீஸ். அதன் பிறகுதான் இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையால் ஆதர்ஷ் மொத்த உண்மைகளையும் போட்டு உடைத்தார். ஆறு வருடங்களாக ராகியும் அகிலும் காதலித்து வந்தனர். ஆனால், சமீபத்தில் அகிலுக்கு குடும்பத்தினர் வேறு ஒரு பெண் பார்க்கும் தகவல் ராகிக்குத் தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் ``என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்'' என அகிலை ராகி வற்புறுத்தியுள்ளார். அதை அகில் கேட்க மறுத்ததால், அவருக்கு நிச்சயித்த பெண்ணையே நேரில் சந்தித்து இருவருக்கும் இடையே உள்ள காதல் விவகாரங்கள் குறித்துப் பேசியுள்ளார் ராகி. இதனால் அவரது திருமணம் தடைப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. திருமணம் தடையானதால் ஆத்திமடைந்த அகில், கடந்த மாதம் சொந்த ஊருக்கு ராகி வந்துள்ளதை அறிந்து அவரை, தான் கட்டி வரும் புதுவீட்டை பார்க்கக் கூப்பிட்டுள்ளார். அதை நம்பிச் சென்ற ராகியை அவரது வீட்டிலேயே வைத்து அகிலும் அவரின் தம்பியும் நண்பரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். கொலை செய்தபின் புது வீட்டின் பின்புறம் அவரைப் புதைத்தும் உள்ளனர்.
இந்தத் தகவலை ஆதர்ஷ் போலீஸிடம் தெரிவிக்க நேற்று, அகில் வீட்டின் பின்புறம் இருந்து அழுகிய நிலையில் `ராகி'யின் உடலைத் தோண்டி எடுத்துள்ளனர். முகம், உடல் சிதைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் குறித்துப் பேசியுள்ள பூவார் போலீஸார், ``இது திட்டமிட்ட செய்யப்பட்ட கொலை. கல்யாணம் செய்ய சொல்லித் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்ததால் ராகியைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என பிளான் செய்தே அவர் வருவதற்கு முன்பே கொலை செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். அகிலின் தம்பி ராகுல்தான் அவரைக் கொலை செய்துள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளது.
தலைமறைவாகியுள்ள இருவரையும் விரைவில் பிடிப்போம்" எனக் கூறியுள்ள போலீஸார், ``இந்தக் கொலையிலிருந்து போலீஸை திருப்ப, ``நான் சென்னைக்குச் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்" என்று ராகி அனுப்பியதுபோல் அவரது போனிலிருந்தே அனைவருக்கும் மெசேஜ் அனுப்பியிருக்கிறார் அகில். இதனால் முதலில் விசாரணை தடம் மாறியது. ஆனால், இந்த மெசேஜ் குறித்து ஆதர்ஷிடம் கேள்வி எழுப்பியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். அவரது பேச்சில் சந்தேகம் வலுக்கவே விசாரணையை வேறு மாதிரி கையாண்டோம்" என விசாரணையைக் கொலையாளிகள் திசை திருப்பியதையும் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments