மத்திய பொருளாதார அமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தை பற்றி எதுவுமே தெரியாது என கடுமையாக விமர்சித்துள்ளார் மாநிலங்களவை எம்.பி. ஆன சுப்பிரமணியன் சுவாமி.
இந்தியாவின் சமீபத்திய நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 2வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ள நிலையில், எட்டு முக்கிய தொழிற்சாலைகளின் உற்பத்தியும் கடந்த அக்டோபரில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடும்போது, மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சியை தான் இந்த ஆண்டு சந்தித்துள்ளது எனவும், அதற்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தான் முக்கிய காரணம் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய அரசு வெளியிடுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நிதியமைச்சர் நிர்மலாவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியை சுற்றி இருக்கும் ஆமாம் சாமி கூட்டங்கள் தான் என தெரிவித்த அவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் என்றாலே என்னவென்று தெரியாது என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், பிரதமரை சுற்றியுள்ள ஆலோசகர்கள், மோடியிடம் பொருளாதாரம் குறித்த உண்மை நிலையை கூறுவதற்கு அச்சப்படுவதாகவும், அதன் காரணமாக பொய்யான வளர்ச்சியை கூறி அவரை நம்ப வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments