நாடு முழுவதும் மூட்டை, மூட்டையாக கொள்ளையடிக்கப்படும் வெங்காயம்!

நாடு முழுவதும் மூட்டை, மூட்டையாக கொள்ளையடிக்கப்படும் வெங்காயம்!

in News / National

வெங்காயம் விலை வரலாறு காணாத அளவில் தினமும் உயர்ந்து வருகிறது. வெளிச்சந்தைகளில் பல்லாரி வெங்காயம் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் விலை ரூ.160க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது.

இதனால் ஓட்டல்கள், உணவகங்களில் வெங்காயத்திற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அனைத்து தரப்பினரையும் வெங்காயம் விலை புலம்ப வைத்துள்ளது.

இதனை சரிசெய்யவும், வெங்காயம் விலையை குறைக்கவும் உடனடியாக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வெங்காயங்களை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் நகரில் பசுதேவ்பூர் பஜார் பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து உருளை கிழங்கு மற்றும் வெங்காயம் கொண்ட 3 மூட்டைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று 100 கிலோ எடை கொண்ட இஞ்சி, 90 கிலோ எடை கொண்ட வெள்ளை பூண்டு ஆகியவையும் கொள்ளை போயுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.45 ஆயிரம் இருக்கும் என கடை உரிமையாளர் அக்சய் தாஸ் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் சிவபுரி நகரில் வெங்காயம் ஏற்றி சென்ற லாரி ஒன்று காணாமல் போயுள்ளது. இந்த லாரி நாசிக் நகரில் இருந்து கோரக்பூர் நோக்கி சென்றபொழுது இந்த சம்பவம் நடந்துள்ளது. லாரியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெங்காயங்கள் இருந்துள்ளன.

இதுபற்றி தொழிலதிபர் பிரேம் சந்த் சுக்லா என்பவர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில் வெங்காயங்கள் எதுவும் இன்றி காலியாக லாரி ஒன்று நின்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top