அயோத்தி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு - ராம ஜென்மபூமி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்குத் தரப்படுகிறது என்றும், அந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டலாம் என்றும் தெரிவித்தது. மேலும், மசூதி கட்டுவதற்கு அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலத்தை சன்னி வஃக்ப் வாரியத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு சட்டம் ஒழுங்கைக் கருத்தில்கொண்டும் சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். எனினும், அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதில்லை என்று சன்னி வஃக்ப் வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்துவிட்டன. இந்த நிலையில் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா சையத் அர்ஷ்ஹத் ரஷிதி 217 பக்கங்கள் அடங்கிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அயோத்தி மூல வழக்கைத் தொடர்ந்தவரான சித்திக்கின் சட்டவாரிசுதான் இந்த மவுலானா ரஷிதி.
அவர் தனது மனுவில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பிழைகள் இருப்பதால் மறு ஆய்வு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். “இந்து அமைப்புகளால் செய்யப்பட்ட சட்டவிரோதச் செயல்களை நீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. ஆனால், சட்டவிரோதச் செயல்களுக்குப் பரிசாகச் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை வழங்கியுள்ளனர். 1992இல் பாபர் மசூதி தகர்க்கப்படுவதற்கு வழிவகுத்த 1934ஆம் ஆண்டில் குவிமாட அழிப்பு செயலை சட்ட விரோதம் எனப் பதிவு செய்துள்ள ஐந்து நீதிபதிகள் அமர்வு, இந்துக்களுக்கு ஆதரவாக எவ்வாறு தீர்ப்பளிக்க முடியும்” என்று அந்த மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், “இந்த வழக்கு முடிவுக்கு வரவேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளேன். இருந்தாலும், நீதி கிடைக்காத இடத்தில் அமைதி இருக்காது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments