ரயில்வே தனது பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணங்களைப் பகுப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். இதனால் ரயில்வே டிக்கெட்டின் , விலைகள் அதிகரிக்கப்படுமா என்று கூற அவர் மறுத்துவிட்டார்.
நேற்று முன்தினம் (டிசம்பர் 26) மாலை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே வாரியத் தலைவர், “ரயில்வே அதன் குறைந்து வரும் வருவாயை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளைத் தொடங்கினாலும், கட்டணங்களை அதிகரிப்பது ஒரு முக்கியமான பிரச்சினையாகவே இருக்கிறது., இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் இதுகுறித்து விவாதிக்கப்படும்” என்றும் கூறினார்.
“நாங்கள் பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணங்களைப் பகுப்பாய்வு செய்யப் போகிறோம். ஏதோ ஒரு நடவடிக்கை இருக்கும். என்னால் அதிகம் வெளிப்படுத்த முடியாது. ரயில்வேயில் சரக்குக் கட்டணங்கள் ஏற்கனவே அதிகமாக இருந்தாலும், சாலைப் போக்குவரத்தில் இருந்து ரயில்வேக்கு அதிக போக்குவரத்தை ஈர்ப்பதே எங்களது இப்போதைய இலக்கு” என்றும் அவர் கூறினார்.
இதேநேரம் ரயில்வே வாரிய செய்தித் தொடர்பாளர் ஆர்.டி.பாஜ்பாய், “கட்டணங்களை உயர்த்த எந்த திட்டமும் இல்லை. ஒருவேளை குறையக்கூடும்” என்று கூறினார். ஆனால், ரயில்வே வாரிய வட்டாரங்களின்படி, கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டம் அரசாங்கத்துடன் பல மாதங்களாக உள்ளது என்கிறார்கள்.
2016ஆம் ஆண்டு ஏற்கனவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவில், கட்டண உயர்வில் கீழ் வகுப்பினரைத் தவிர்ப்பது, வெவ்வேறு வகுப்புகளுக்கு வெவ்வேறு உயர்வு அடுக்குகள் போன்ற திட்டங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
கடைசியாக ரயில் கட்டணம் 2014ஆம் ஆண்டில் கடைசியாக உயர்த்தப்பட்டது. பயணிகள் கட்டணத்தில் 14.2 சதவிகிதம் மற்றும் சரக்கு விகிதத்தில் 6.6 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. இது முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்து வைத்திருந்தது எனவும் கூறப்பட்டது.
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ரயில்வே ரூ.20,000 கோடிக்கு மேல் வருவாய் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் வருமானத்தை ஈடுசெய்வதற்காகக் கட்டண உயர்வு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments