சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!

சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!

in News / National

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற நிலை பல்லாண்டு காலமாக இருந்து வந்தது.

இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், சபரிமலையில் எல்லா வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. 4 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். அமர்வில் இடம் பெற்றிருந்த ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு, பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும் கூட, இந்து அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரால் 56 மறு ஆய்வு மனுக்கள், 4 ‘ரிட்’ மனுக்கள் மற்றும் 5 இடமாற்ற மனுக்கள் என மொத்தம் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

இப்போது 9 மாதங்களுக்கு பின்னர் சபரிமலை வழக்கில் இன்று காலை தீர்ப்பு அளிக்கப்படும் என கூறப்பட்டது.

அதன் படி இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளது.

பெண்கள் அனுமதிக்கான முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை. பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோவில்களிலும், மசூதிகளிலும் உள்ளது . மதம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. மற்ற மதங்களில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்து இந்து அமைப்புகளின் மனுதாரர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது. கோவில், மசூதி, தேவாலயம் என எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்களது வழிபாட்டு உரிமையை பறிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top