கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு, தெலுங்கானா மாநிலம் சைபராபாத் காவல் ஆணையர் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெண் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுங்கச்சாவடி அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 4 பேரையும், கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற நிலையில், அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
இதற்கு அதிக அளவில் வரவேற்பு இருந்தாலும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்த என்கவுண்ட்டர் தொர்பாக விசாரணை நடத்தக்கோரி புகார்கள் வரப்பெற்ற நிலையில், சைபராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த என்கவுண்ட்டர் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ள நிலையில், இது குறித்து விசாரிக்க தெலுங்கானா மாநில அரசு, சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது. ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் எம். பகவத் அதன் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
0 Comments