குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் போலீசாருக்கும், போராட்டக்காரர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக கூறி போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
போராட்டக்காரர்கள் போலீஸ் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையாளர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
டெல்லியில் சீலம்பூர் பகுதியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தியதால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
பதற்றம் காரணமாக டெல்லி சீலம்பூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மோதலை தொடர்ந்து சீலம்பூர் முதல் ஜஃப்ராபாத் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்ததால் சீலாம்பூர் மற்றும் கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
0 Comments