இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி ஒப்பந்தம் போட்டது.
இந்த ஒப்பந்தத்தில், விமானத்தின் விலையை நிர்ணயம் செய்ததில் இருந்து, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வக்கீல்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.
விசாரணை முடிவில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என கூறி, 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10-ந் தேதி ஒத்திவைத்தனர்.
6 மாதங்களுக்கு பின்னர் ரபேல் மறு ஆய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
0 Comments