சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின்போது, கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். கடல் அலைகளில் கால்நனைத்து, கடலோடு உரையாடியதாக கடந்த 13ம் தேதி இந்தியில் கவிதை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தனது கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பையும் பிரதமர் மோடி தந்து ட்விட்டர் பகுதியில் பதிவிட்டார்.
இது குறித்து நடிகர் விவேக் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இயற்கையை மதிப்பது கடவுளை மதிப்பதற்கு சமம், ஏனெனில் இயற்கை தான் கடவுள் எனக் குறிப்பிட்டிருந்தார் .மேலும் கடல் தொடர்பான தங்களின் அன்பான கவிதைக்கு தேசத்தின் சார்பில் நன்றி எனவும், பிரதமர் மோடியை டேக் செய்து விவேக் பதிவிட்டிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இயற்கையை மதிப்பது நமது கலாச்சாரத்தின் முக்கியப் பகுதி. இயற்கை ஆன்மீகத்தையும், மகத்துவத்தையும் வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அழகிய மாமல்லபுரம் கடற்கரையும், அங்கு நிலவிய காலை நேர அமைதியும் தனது எண்ணங்களுள் சிலவற்றை பிரதிபலிக்க உதவியாக இருந்தது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் தயாரிப்பாளர் தனஞ்செயனும், தமிழ் மொழி மீதான பிரதமரின் அன்பு அற்புதமானது எனவும், நமது மொழி மீதான பிரதமரின் அன்பையும், ஆதரவையும் நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் எனவும் கூறி, பிரதமருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர், துடிப்பான கலாச்சாரத்தை வளர்த்தெடுத்த உலகின் பழமையான மொழியில் தனது எண்ணங்களை வெளிப்படுத்தியது குறித்து தான் பெருமைகொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்மொழி அழகானது எனவும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் எனவும் அந்த பதிவில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
0 Comments