ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்த வாவா சுரேஷ் கவலைக்கிடம்: ராஜ நாகம் தீண்டியதால் தீவிர சிகிச்சை

ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்த வாவா சுரேஷ் கவலைக்கிடம்: ராஜ நாகம் தீண்டியதால் தீவிர சிகிச்சை

in News / National

ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்த வாவா சுரேஷ் கவலைக்கிடம்: ராஜ நாகம் தீண்டியதால் தீவிர சிகிச்சை

கோட்டயம்: ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனத்தில் விட்டு பல்லுயிர் சமன்பாட்டைப் பேண உதவிய கேரளாவைச் சேர்ந்த இளைஞர் வாவா சுரேஷை ராஜ நாகம் தீண்டியது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்லுயிர் சமன்பாட்டுக்குப் பாம்புகள் மிக அவசியம். ஆனால், இதை உணராத காரணத்தாலேயே பாம்பைக் கண்டவுடன் மக்கள் அதனை அடித்துக் கொன்று விடுகின்றனர். ஆனால் இப்போது இது குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்பட்டிருக்கிறது.

அதனால் மக்களும் வீடுகளில் பாம்புகளைக் கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இல்லையேல் பாம்புகளைப் பிடிக்கவே செயல்படும் சூழலியல் சார்ந்த தன்னார்வலர்களை அழைக்கின்றனர்.

அப்படித்தான் கேரள மக்கள் எப்போதும் வாவா சுரேஷை அழைக்கின்றனர். நேற்றும் வழக்கம்போல் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் செங்கனாச்சேரி அருகே குறிச்சி எனும் பகுதியில் ஒரு வீட்டில் ராஜநாகம் புகுந்துவிட்டதாகத் தெரிவித்தார். மாலை 4.45 மணியளவில் வா வா சுரேஷ் அந்தப் பகுதிக்குச் சென்றார். பாம்பை லாவகமாக பிடித்த அவர் அதனை சாக்குப் பைக்குள் நுழைக்க முயன்றார். ஆனால், அப்போது விநாடியில் பாம்பு கைப்பிடியிலிருந்து நழுவ அது சுரேஷின் வலது தொடையில் கடித்தது. பாம்பை இழுத்து கீழே தள்ளினார் சுரேஷ். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்தவர்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வா வா சுரேஷை விஷப் பாம்பு தீண்டுவது இது முதன்முறையல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு விரியன் வகை பாம்பு ஒன்று தீண்டியதால் பல நாட்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவரை மீண்டும் பாம்பு தீண்டியுள்ளது.

வாவா சுரேஷுக்கு பாம்புப் பண்ணையில் அரசு வேலை வழங்கப்பட்டது. ஆனால் அதைத் துறந்த அவர், பாம்புகளை பிடித்து அவற்றை வனப் பகுதியில் விடுவிக்கும் பணியில் மன நிம்மதி இருப்பதாகக் கூறி அரசு வேலையை உதறினார். ஒரு பேட்டியில் அவர், நான் பாம்பு பிடிக்கவில்லை என்றால் உயிரோடு இல்லை என்று அர்த்தம் எனக் கூறியிருப்பார்.

பொதுமக்கள் எந்த நேரத்திலும் எந்தச் சூழலிலும் அழைத்தாலும் பாம்புகளைப் பிடிக்கும் வா வா சுரேஷ் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். வா வா சுரேஷ் தற்போது கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து விசாரித்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அவருக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top