கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 வயது சிறுமி முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற நிலை பல்லாண்டு காலமாக இருந்து வந்தது.
இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், சபரிமலையில் எல்லா வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. 4 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். அமர்வில் இடம் பெற்றிருந்த ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு , பெண் அமைப்புகள் வரவேற்பு அளித்தாலும் கூட, இந்து அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
கடந்த ஆண்டு மகரவிளக்கு வழிபாட்டின்போது போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முயற்சித்த வேளையில் அதற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு தீவிரம் காட்டியது.
இருப்பினும் இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரால் 56 மறு ஆய்வு மனுக்கள், 4 ‘ரிட்’ மனுக்கள் மற்றும் 5 இடமாற்ற மனுக்கள் என மொத்தம் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
நாயர் சர்வீஸ் சொசைட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி, திருவாங்கூர் தேவசம் போர்டு, கேரள மாநில அரசு என பல தரப்பினரும் தீர்ப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.
சபரிமலை கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிற திருவாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசுடன் இணைந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த ஆதரவு தெரிவித்து பல்டி அடித்தது நினைவுகூரத்தக்கது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 17-ந் தேதி பதவி ஓய்வு பெறுகிற நிலையில், அதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது.
இப்போது 9 மாதங்களுக்கு பின்னர் சபரிமலை வழக்கில் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு வழங்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு வழிபாடு வரும் 17-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் இன்றைய தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது, அதே போல் ரபேல் வழக்கிலும் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி ஒப்பந்தம் போட்டது.
இந்த ஒப்பந்தத்தில், விமானத்தின் விலையை நிர்ணயம் செய்ததில் இருந்து, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வக்கீல்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.
விசாரணை முடிவில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என கூறி, 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்துதரப்பு வாதத்தையும் கேட்டு முடித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10-ந் தேதி ஒத்திவைத்தனர்.
6 மாதங்களுக்கு பின்னர் ரபேல் மறு ஆய்வு மனுக்கள் மீது இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
ரபேல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு டிசம்பர் 14-ந் தேதி அளித்த தீர்ப்புக்கு பின்னர் ஊடகங்களில் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, புதிய ஆவணங்களின் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என கடந்த ஏப்ரல் 10-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தபோது, “காவலாளியே திருடன் என சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டு விட்டது” என கருத்து தெரிவித்தார்.
ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திரித்துக்கூறி விட்டதாக அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் பாரதீய ஜனதா பெண் எம்.பி. மீனாட்சி லேகி வழக்கு ஒன்றை தொடுத்தார். அந்த வழக்கில், ராகுல் காந்தி தான் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது இப்படி கருத்து தெரிவித்ததாக கூறி வருத்தம் தெரிவித்தார். இந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வருகிறது.
0 Comments