அசாம், திரிபுரா மாநிலங்களில் மூன்றாவது நாளாக (12.12.19) வன்முறை நீடிக்கிறது. இதனால் அந்த மாநிலங்களில் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இண்டெர்நெட் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு சட்ட திருத்தம் செய்துள்ளது. மேலும் அகதிகளாக வந்தவர்கள் 11 ஆண்டுகளுக்கு பதில் 5 ஆண்டுகள் வசித்தாலே போதும் என்றும் சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் வங்க தேசத்தில் இருந்து ஊடுருவி வந்தவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக கடுமையான போராட்டம் நீடிக்கிறது. அசாமின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் அமைப்புகள் முன்நின்று போராட்டத்தை நடத்துகின்றன. தலைநகர் கவுகாத்தியில் மாணவர்கள் தலைமைச் செயலகம் உள்பட பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை, தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். ரெயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பஸ் நிறுத்தங்கள் போன்ற முக்கிய இடங்களில் தீவைத்து எரிக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
அசாம் தலைநகர் கவுகாத்தி மட்டுமின்றி லகீம்பூர், தேமாஜி, தின்சுகியா, திப்ரூகர், சடியோ, சிவசாகர், ஜோர்கட், கோலாகாட், கம்ரூப், பெங்கைகான் ஆகிய 10 மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அசாமில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர் போராட்டங்கள் காரணமாக அசாமில் வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இது இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. போராட்டக்காரர்கள் தீவைப்பில் ஈடுபடுவதால் ரெயில் போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது. பஸ், ரெயில் போக்குவரத்து போன்று அசாமில் விமான சேவையிலும் இன்று பாதிப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக பயணிகள் திப்ரூகர் விமான நிலையத்துக்கு வர முடியவில்லை. இதனால் திப்ரூகர்- கொல்கத்தா விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்தது. அது போல கவுகாத்தி- கொல்கத்தா இடையிலான இரு விமான சேவையை விஸ்தரா விமான நிறுவனம் ரத்து செய்தது. ஸ்பைஸ் ஜெட், கோ ஏர் நிறுவனங்களும் தங்களது விமான சேவையில் மாற்றங்கள் செய்துள்ளன.
அசாம் மாநிலத்தில் ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று (12.12.19) 4-ம் நாள் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக போட்டியை கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. இதற்கிடையே கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. அசாம் போன்று திரிபுரா மாநிலத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மக்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மூன்றாவது நாளாக திரிபுராவில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து திரிபுரா மாநிலம் முழுவதும் அசாமில் 10 மாவட்டங்களிலும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
அசாம், திரிபுரா இரு மாநிலங்களிலும் கலவரம் அதிகமாகி வருவதால் ராணுவ வீரர்களும், துணை நிலை ராணுவ வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக அசாமுக்கு 2000 வீரர்களை கொண்ட 20 கம்பெனி ராணுவப்படை விரைந்துள்ளது. அவர்கள் கவுகாத்தி, திப்ரூகர் மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். திரிபுரா மாநிலத்துக்கு ஆயிரம் ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களிலும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினார்கள். முக்கிய சந்திப்பு பகுதிகளில் துணை நிலை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் பரவுவதை தடுக்க கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாம் மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமர் மோடியும், அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவாலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 Comments