ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காணாமல் போன பெண் மருத்துவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் பொடுலா பிரியங்கா ரெட்டி (26). இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று விட்டு இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வழியில் வாகனத்தின் டயர் பஞ்சர் ஆகி உள்ளது. உடனே அவரது தங்கைக்கு போன் செய்து, வரும் வழியில் டயர் பஞ்சர் ஆகிவிட்டதாகவும், அடையாளம் தெரியாத இரண்டு பேர் தனக்கு வாகனம் பஞ்சர் போடுவதற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னோடு தொடர்ந்து பேசி கொண்டு இருக்கும்படியும், அவர்களை பார்த்தால் தனக்கு பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்களில் அவரது அழைப்பு கட் ஆகியுள்ளது. இதையடுத்து அவரது தங்கை மீண்டும் முயற்சித்தபோது, போன் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை வீட்டில் தெரிவித்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் அவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, பிரியங்கா தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லுவதும், அங்கே 2 லாரி ஓட்டுநர்கள் டயர் பஞ்சர் ஆகிவிட்டதாக கூறி, அவருக்கு உதவி செய்ய முன்வந்ததும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சம்பவம் நடந்த பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 30 கி.மீ தூரத்தில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதாக விவசாயி ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தபோது, அந்த பெண் பிரியங்கா ரெட்டி தான் என்பது தெரியவந்தது. சம்பவம் நடந்த பகுதியில் மதுபானப்பாட்டில்கள் கிடந்ததை கண்ட காவல்துறையினர் பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். தற்போது அவருக்கு உதவிசெய்வதாக கூறி நிறுத்திய லாரி ஓட்டுநரும், கிளீனரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளபட்ட வருகிறது.
0 Comments