சென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக, 4 பேராசிரியர்கள் உள்ளிட்ட 11 பேரிடம், தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில், கடந்த 9-ம் தேதி, கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் என்பவர், தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே, தமது மகள் தற்கொலைக்கு 3 பேராசிரியர்கள் தான் காரணம், என அவரது தந்தை அப்துல் லத்திப், பிரதமர் மோடி, கேரள முதல்வர் மற்றும் தமிழக முதல்வருக்கு புகார் மனு அளித்துள்ளார். தமது மகளின் செல்போனில் இருந்த தற்கொலை கடிதத்தின் மூலம், அதை தெரிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இதுதொடர்பாக விரிவான புகாரளிக்க, சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு, அப்துல் லத்தீப் நாளை (14.11.2019) வர உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவி தற்கொலை தொடர்பாக, ஐஐடி பேராசிரியர்கள் 4 பேர் உட்பட, 11 பேரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், அவர்களிடம் இருந்து தனித்தனியே வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் சுதர்சன் தெரிவித்துள்ளார். மேலும், மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான கடிதம், தடயவியல் துறைக்கு அனுப்பி ஆராய்ந்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் உள்ள சில பேராசியர்களே, தான் தற்கொலை செய்துகொள்ள காரணம், என்று மாணவி பாத்திமா லத்திப் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தை தனது செல்போனில் அவர் பதிவு செய்து வைத்துள்ளார்.மேலும், தனது தற்கொலைக்கு, குறிப்பாக உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான், காரணம் என்றும், அந்த கடிதத்தில் பாத்திமா பதிவு செய்துள்ளார். முஸ்லீம் பெயருடன், தான் ஒவ்வொரு தேர்விலும் முதலிடம் பெறுவதை, அருவெறுக்கத்தக்க வகையில் பார்த்தார்கள், எனவும் அந்த கடிதத்தில் மாணவி பாத்திமா குறிப்பிட்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர், ஐஐடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர்கள் வலியுறுத்தினர்.
0 Comments