பாதசாரிகளின் பாதுகாப்புக்கும், வாகன ஓட்டிகளின் நலனுக்காகவும், நட்ட நடுச்சாலையில், கால்கடுக்க, மணிக்கணக்கில் காத்து நிற்கும் காவலர்கள் படும்பாடு சொல்லமுடியாத ஒன்றாகும். போக்குவரத்து மற்றும் காவல்துறை ஊழியர்கள் சாலை போக்குவரத்துப்பணியில் அமர்த்தப் படும்போதே ஒருவிதமான மன உளைச்சலுக்கு ஆளாவதாக காவல்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
இயற்கை, காலநிலை மாறுபாடுகள் மற்றும் பேரிடர் காலங்களில் அவர்கள் பெரும் இன்னலுக்காளாகிறார்கள். மழைக்காலம் மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்கக் கூட முடியாத சூழலில் அவர்கள் தவிப்பதைக் காணும் போது நமக்கே ஒருவித சோகம் தொற்றிக் கொள்வதை உணர முடியும். அதிலும் பெண் காவலர்களின் நிலை இன்னும் மோசம். இயற்கை உபாதைகளைக் கடப்பதில் அவர்களுக்கு உண்டாகும் நடைமுறைச் சிக்கல் எழுத்தில் வடிக்க முடியாது.
முன்பெல்லாம் முச்சந்தி , நாற்சந்திகளில் காவல் துறையின் சார்பில் நிழற்குடைகள் அமைக்கப் பட்டு , அவர்களுக்கான குடிநீர் மற்றும் இன்னபிற சவுகரியங்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதைக் கண்டிருப்போம். போக்குவரத்து அவ்வளவு நெரிசலற்ற காலகட்டங்களிலேயே அத்தனை அம்சங்களை ஏற்படுத்திக் கொடுத்த காவல்துறை, இன்று இத்தனை அடர்த்தியான வாகனங்களுக்கும், சுற்றுப்புறச் சீர்கேடுகளின் மத்தியிலும் தங்களது கடைநிலை ஊழியர்களை அம்போவென தெருவில் நிறுத்தியிருப்பதுதான் ஏனென்று தெரியவில்லை.
ஏ.சி வாகனங்களில் பயணிக்கும் உயரதிகாரிகளுக்கு இவர்களின் வாழ்வியல் சிக்கலும் , உளவியலும் புரிவதில்லை என பொதுமக்களும் கூட இந்தக் காவலர்களுக்காக பரிந்து பேசி, பரிதாபப் படுகிறார்கள்.
அசுத்தமான இந்த சுற்றுபுறச் சூழலில் புகைமண்டலம் மற்றும் தூசுமண்டலத்திலும் பழியாய் காவலுக்கு நிற்கும் இவர்களுக்கு காவல்துறை சார்பில் முகமூடி , மழைக்கோட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்தால் அவர்களின் சிரமங்கள் குறையும் என்பதே அந்தப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுதலாக உள்ளது.
0 Comments