3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வென்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி!

3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வென்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி!

in Entertainment / Sports

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே சர்வதேச மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் ஆரம்பத்திலேய சிக்ஸர் மழைகளைப் பொழிந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். இதன் மூலம் அணியின் ரன் வேகம் அதிகரித்தது. இதனால் இந்திய அணி 48 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தது. பின்னர் தனது அரைசதத்தை பதிவு செய்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த ரோகித் சர்மா, ஆனால் 71(34) ரன்களில் கெஸ்ரிக் வில்லியஸ் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பாண்ட் (0) ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல் 91 ரன்களில் (9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்கடுத்ததாக 4 வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். களத்தில் வாணவேடிக்கை காட்டிய விராட் கோலி 29 பந்துகளில் 70 ரன்கள் (4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் வில்லியம்ஸ், பொல்லார்ட் மற்றும் காட்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடின இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில், லென்டில் சிமோன்ஸ் மற்றும் பிரன்டன் கிங் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் பிரன்டன் கிங் 5(4) ரன்களும், லென்டில் சிமோன்ஸ்7(11) ரன்னும், அடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஹெட்மயர் மற்றும் கேப்டன் பொல்லார்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்த நிலையில், ஹெட்மயர் 41(24) ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜாசன் ஹோல்டர் 8(5) ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் பொல்லார்டுடன், ஹேடன் வால்ஷ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய பொல்லார்ட் 33 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்த நிலையில், 68(39) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹேடன் வால்ஷ் 11(13) ரன்களும், கேரி பியர் 6(12) ரன்னும் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் காட்ரெல் 4(4) ரன்களும், கேஸ்ரிக் வில்லியம்ஸ் 13(7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், முகமது சமி, குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 3 போட்டிகள் கொண்ட டி -20 தொடரையும் கைப்பற்றியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top