கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று சினிமா படத்தில் நடிகை டாப்சி பன்னு!

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று சினிமா படத்தில் நடிகை டாப்சி பன்னு!

in Entertainment / Sports

மறைந்த அல்லது வாழும் பிரபலங்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருந்த வாழ்க்கை வரலாற்று சினிமா படங்கள், தற்காலத்தில் வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கைப் பரப்புரை என பல வடிவங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் என அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படங்கள் உருவாகி வருகின்றன. அது மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் டோனி, சச்சின் தெண்டுல்கர் ஆகியோரின் வாழக்கை வரலாறும் சினிமாவாக தயாரிக்கப்பட்டது.

தற்போது இந்த வகையில் இந்தியா முழுமையும் உள்ள ஆளுமைமிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள் என பிரபலங்களின் வாழ்க்கையைத் தழுவி சினிமா படமாக்கும் பாணி தொடங்கியுள்ளது.

அந்த வரிசையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு குறித்து தயாரிக்கப்படும் "சபாஷ் மிது" படத்தில் நடிகை டாப்சி பன்னு மிதலியாக நடிக்க உள்ளார்.

"சபாஷ் மிது"வை வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ரெய்ஸ் ஹெல்மர் ராகுல் தோலாகியா இயக்குகிறார். 'மிதாலி ராஜ்' ஆக டாப்சி பன்னு நடிக்க உள்ளார்.

இது குறித்து நடிகை டாப்சி பன்னு கூறியதாவது:-

இந்த பாத்திரத்தில் நடிப்பது மிகவும் பெருமைக்குரியது. இந்தியாவில் பெண்களின் கிரிக்கெட் உணரப்பட்ட மற்றும் பார்க்கும் விதத்தை மிதாலி ராஜ் மாற்றிய விதம் உண்மையிலேயே சொல்ல வேண்டிய கதை தான். அவர் எப்போதும் தைரியமாகவும் வலுவாகவும் இருந்தார். அதுதான் அவருடன் நான் உணரும் இணைப்பு.

இந்த கதையை சொல்லத் தேர்ந்தெடுத்ததற்காக வியாகாம் 18 ஸ்டுடியோவுக்கு என் நன்றியையும், ராகுல் தோலாகியாவுடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்புக்கும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டில் ஒரு மதமாக கருதப்படும் கிரிக்கெட் விளையாட்டைக் கற்றுக்கொள்ளவும் நான் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளேன் என கூறினார்.

இது குறித்து மிதாலி ராஜ் கூறியதாவது:

பெரிதாக கனவு காணும் இளம் பெண்களை சென்றடைய இது ஒரு மிகப் பெரிய தளமாக அமையும். நான் எப்போதும் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தேன். எனது கதையை திரையில் உயிரோடு கொண்டு வருவதற்காக மட்டுமல்லாமல், கனவு காணத் துணிந்த இளம் பெண்களைச் சென்றடைய ஒரு பெரிய தளத்தை வழங்கியதற்காகவும் அஜித் அந்தரே மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top